Abstract—இலக்கியம் என்பது மானுட வாழ்வியல் நடைமுறைகளின் முகிழ்ப்பாக வார்ப்பாக ஆக்கம்கொள்ளும் போக்கினை உட்கொண்டே தொல்காப்பியர், இலக்கியம் கண்டு இலக்கணம் இயம்பும் நடைமுறையை 'பாடலுள் பயின்றவை நாடுங்காலை’ எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இலக்கிய இலக்கணப் பனுவல்கள் வரலாற்றின் வகை மாதிரிகளாக, மானுட சிந்தனைப் போக்கின் பதிவுகளாக, காலத்தையும் காலத்தின் முரண்பாடுகளையும் கட்டமைத்துக் காட்டுகின்றன எனக்கொள்வதில் பிழையேதும் இல்லை.. அவ்வகையில் பழந்தமிழினத்தின் வாழ்வியங்கியலையும் புலமைமரபுப் போக்குகளையும் செய்யுளாக்கச் செயல்பாடுகளையும் அளந்தறிவதற்குரிய ஆவணமாகத் தொல்காப்பியத் திணைக் கோட்பாட்டியலைக் கருதவியலும். அக்கோட்பாட்டின் ஓரங்கமாக ஐவகை நிலத்தும் கருக்கொள்ளும் பொருள் மரபினதாக ஒவ்வொரு நிலத்துக்கும் தனித்த நிலையிலான பண்ணிசைக் கருவியாக யாழையும் தாளமுழக்குக் கருவியாகப் பறையையும் இனம் காட்டியிருப்பது அவற்றின் தொன்மையையும் பயன்பாட்டுத் தன்மையையும் வரையறை செய்ய வழிவகுக்கும்.. பட்டினப்பாலை எடுத்துக்காட்டுவதைப்போல் பாடல் ஓர்ந்தும் நாடகம் நயந்தும் வாழ்வியலை வகுத்துக் கொண்ட தமிழர்தம் அக வாழ்விலும் புறவாழ்விலும் இசை வெறும் கலை வடிவமாக மட்டுமல்லாமல் சமூக இயங்கியல் கருவியாகக் காலம்தோறும் பயில்வு பெற்று வந்திருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். இனக்குழுச் சமூகமாக இருந்தகாலம் தொட்டு இன்றுவரை இடையீடுபடாத இழைமரபினதாகத் தொடர்ந்துவரும் தமிழ் இசைமரபு குறித்தும் தமிழ்ச்சமூக இயங்கியல் கருவியாக இசை பெறும் இடம் குறித்தும் காலந்தோறும் அக்கலைமரபில் அரசியல் பண்பாட்டுச் சூழல்கள் நிகழ்த்திய ஊடாட்டங்கள் பற்றியும் ஆய்ந்தறிவது அவசியமானது.